Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Tuesday, July 2, 2024

32.யாரு வேறிங்கு கூறு ( நாலு பேருக்கு நன்றி ) **

 

விருத்தம்
உலகத்தின் உயிருக்கெல்லாம் தாயைப்-போல் யாருமில்லை
நான் ஒருவனாய் உரைக்கவில்லை இதற்கு ஓர் மறுப்பு இல்லை
என் அன்னையே என்று தாளில் உவந்து நீ புகுந்து கொள்ள
உனக்கொரு பந்தம் அன்னை .. எவருக்கும் இறைவன் தந்தான் 
நீ-கூறு வே..றிங்கு யாரு
__________________________________

யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு (2)
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு
(MUSIC)
உனக்கு ஒன்றும் எனக்கு ஒன்றும்  இறைவன் உலகினில் இருந்து 
அநுதினமும் வழங்கியதே அனைத்தும் அன்னை என்று 
பார்த்துப் பார்த்தே யாவும் செய்யும் தாயின் உள்ளம் என்றும் ஓடும் (2)
சொந்தமாகும் பிள்ளை பின்னால் அந்த தாயே தெய்வம் ஆகும்
யாரு வேறிங்கு கூறு
யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு
(MUSIC)
துன்பத்திலே நீ-அழுதால் வந்தேன் என்பது-தாயே
பக்கத்திலே தானிருக்கேன் கண்ணே என்பதும் தாயே
வாடும்போது அவளே வந்தாள்  வாழும் வாழ்வும் அவள் தான் தந்தாள் (2)
 நன்றி சொல்லப் போகும் போது மௌனத்தாலே ஆசி சொல்வாள்
(PAUSE)
நீ கூறு வேறிங்கு யாரு
யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள 
யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு




Thursday, December 22, 2022

29.உனது மடியில் புரண்ட-நாட்கள்(உனது விழியில் எனது பார்வை) **

 


உனது  மடியில் புரண்ட-நாட்கள் நெஞ்சில் தோன்றுது (2)
என் நினைவில் இன்றும் இருக்கும் அதுதான் தங்கம் போன்றது 
உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது
(Music)

உயர்வென்று ஆயிரம் நன்று எனக்கென்று வாழ்வில் உண்டு 
தாயுந்தன் அன்பின் முன்னால் அவை என்றும் நிற்குமோ
உயர்வென்று ஆயிரம் நன்று .. எனக்கென்று வாழ்வில் உண்டு 
தாயுந்தன் அன்பின் முன்னால் அவை என்றும் நிற்குமோ
-பூமியின்-மேலே ஆண்டவன் பேர்-தான் தாயெனக்-கூறுவதோ
-உனைப் போல தெய்வம் வருமோ (2)
-உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது
(Music)

தனக்கென்று வாழ்ந்தது கொஞ்சம் குணக்குன்று தாய்மை நெஞ்சம்
அது செய்த த்யாகம் என்றும் தோன்றாது வேறிடம் 
தனக்கென்று வாழ்ந்தது கொஞ்சம் .. குணக்குன்று தாய்மை நெஞ்சம்
அது செய்த த்யாகம் என்றும் தோன்றாது வேறிடம் 
என்-உடல் கொண்ட காயத்தின்-ரத்தம் அவள்-கண் வடிக்கிறது
அது தெய்வம் கொண்ட பிறப்பு (2)
உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது



Wednesday, October 12, 2022

28.ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் **

 


ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
தன்னலம் இன்றி நமக்காக எங்கும் வேராறுமே இல்லையே 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
(MUSIC)
பிள்ளைகள் உதைத்தும் மிதித்தும் என்றைக்கும் இதத்தைக் கொடுக்கும் (2) 
தாயை  நீ பார் 
என்றென்றும் உழைத்தே இளைத்தும் பிள்ளைக்குச் சிறப்பே கொடுக்கும் 
தந்தையைப் பார்
நிலவுபோல்  தாய் முகம் ஆக்குமே பரவசம் 
வாழ்விலே தைரியம் தந்தை தான் இது நிஜம் 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
 (MUSIC)
சென்றங்கு கண் மூடும் வரைக்கும்  என்றைக்கும் சேய் நன்மை நினைக்கும் (2) 
தாய்மையாகும்
என்றென்றும் பிள்ளைக்கே உழைக்கும் விந்தைக்கு இருக்கும் ஒரே பேர் 
தந்தையாகும் 
அன்புதான் தாய் மனம் தந்தையோ கரிசனம்
கண்டபின் வேண்டுமோ ஆண்டவன் தரிசனம்
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
தன்னலம் இன்றி நமக்காக எங்கும் வேராறுமே இல்லையே 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக



Saturday, July 28, 2018

16. தாய் தாய் ( வேல் வேல் வீர முருகனின் வேல்)




தாய் தாய் த்யாக உருவமே தாய் (5)
தாய் தாய் தாய்

தாயவள் கொஞ்சிட அன்பெனும் தேன் ..
தாயவள் நெஞ்சினில் அன்பெனும் தேன்..
(3)
தாயவள் கொஞ்சிட அன்பெனும் தேன்
வடிந்திடுமே
 தாயவள் நெஞ்சினில் அன்பெனும் தேன் வடிந்திடுமே
தாயவள் கொஞ்சிட அன்பெனும்-தேன் வடிந்திடுமே
இனிப்பது எது-எது அதற்கு மேல் மேல் (2)
தாய் தாய் தாய்


குவலயம் காக்கும் இறைவனுக்கோர்-பேர்
கருணையைப் பொழியும் தாயெனும்-பேர்
(2)
சிவனவள்-வடிவே சக்தியும் அவளே

சிவனவள்-வடிவே சக்தியும் அவளே
மகனாகிப் பணிந்திடல் நற்-பெறும் பேறே
(2)
தாய் தாய் த்யாக உருவமே தாய்
த்யாக உருவமே
தாய் தாய் தாய்




Sunday, January 1, 2017

14. இறைவன்-உனை அன்னை-என்று(பரமசிவன் கழுத்திலிருந்து)-அம்மா




இறைவன்-உனை அன்னை-என்று எனக்குத்-தந்தது அது-என் பாக்யமா
(1+SM+1)
தாயைப் பறித்துப்-பிரிவு நோயைத் தந்தான் அம்மா-வைத்யமே
அதற்கெங்குள்ளது அதை கொஞ்சம் சொல்லிடு 
(MUSIC)
உலகு-என்னை ஒதுக்கும்-போது உனக்கு-நெஞ்சு கொதிக்கும்
என் முகத்தில்-கொஞ்சம் பயமிருந்தால் உனது-நெஞ்சம் பதைக்கும் 
(2)
அடடா-பார் இருக்கேன்-நான் கலங்காதே என்று 
நானும் கொஞ்சம் தொய்ந்ததுக்கு அன்னை சொன்னது 
அது அன்றே-சொன்னது அது இன்றும்-கேட்குது
இறைவன்-உனை அன்னை-என்று எனக்குத்-தந்தது அது-என் பாக்யமா
தாயைப் பறித்துப்-பிரிவு நோயைத் தந்தான் அம்மா-வைத்யமே
அதற்கெங்குள்ளது அதை கொஞ்சம் சொல்லிடு 
(MUSIC)
முரண்டி-ஆடும் துர்க்குணங்கள் எனக்கு-என்றும் தோன்றும் இந்த முரடனுக்கும் பரிவு-தந்தாய் உனக்கு-உண்டோ ஈடும்
உனைப்-போலே யாரென்று எனைப்-பார்த்து நீயும் 
உயர்ந்தோன்-நீ நல்லோன்-நீ என்று சொன்னது
அது அன்றே-சொன்னது அது இன்றும்-கேட்குது
இறைவன்-உனை அன்னை-என்று எனக்குத்-தந்தது அது-என் பாக்யமா
தாயைப் பறித்துப்-பிரிவு நோயைத் தந்தான் அம்மா-வைத்யமே
அதற்கெங்குள்ளது அதை கொஞ்சம் சொல்லிடு 
(MUSIC)
நீயும்-நானும் பார்த்திருந்தோம் நிறைகள்-ஒன்றைத் தானே
பல குறைகள்-என்னில் தெரியுதம்மா நீ-பிரிந்ததாலே
நீயும்-நானும் பார்த்திருந்தோம் நிறைகள்-ஒன்றைத் தானே 
பல குறைகள்-இன்று தெரியுதம்மா நீ-பிரிந்ததாலே
பித்தா-நீ என-நானே கேலி செய்தபோது
நீ-தாண்டா என்-வாழ்வில் நிம்மதி-என்று 
நீ அன்று-சொன்னது அது இன்றும்-கேட்குது
இறைவன்-உனை அன்னை-என்று எனக்குத்-தந்தது அது-என் பாக்யமா
தாயைப் பறித்துப்-பிரிவு நோயைத் தந்தான் அம்மா-வைத்யமே
அதற்கெங்குள்ளது அதை கொஞ்சம் சொல்லிடு





Saturday, May 7, 2016

12. அம்மம்மா (அம்மம்மா தம்பி என்று நம்பி)





அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால்-வருமா
(1+SM+1)
தாயன்பு பிள்ளை-எக்க..டையில்-பெறுவான் (2)
* அது முழுக்காத-பாச வெள்ளம் அல்லவோ (2)
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால்-வருமா
(MUSIC)

கண்ணில்-வைத்து காத்திடுவாள் பிள்ளை-முகம் பார்த்திருப்பாள்
அன்பினுக்கு அன்னை-எல்லைக் கோடு
அவள் அன்பு-முகம் வந்து-இதம் தந்தணைக்க..வில்லையெனில்
வந்திருக்கும் பிள்ளைக்குப்-பல் கேடு  

(MUSIC)
அல்லும் பகலுமவள் பிள்ளை என்னலத்தை மட்டும்-கண்டாளே
என்றும் தன்னலத்தின் நினைப்பை ஒதுக்கி-அவள் பிணியைக் கொண்டாளே
(2)
இனி யார்-வருவார் அவள்-போல் தருவார் (2)
இன்று நான்-காணும் போகங்கள் கொஞ்சம் அல்லவே
ஓர் துளிகூட தாயன்பு போலதில் இல்லையே
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால் வருமா

 (MUSIC)
அன்னையன்று தந்த-அன்பு ஒன்..றன்பின் ஒன்று-வந்து
ஓடுதெந்தன் மனத்திரையில் காட்சி
அவள் தன்னின்-அன்பைக் கொண்டவளை ஜோடி-என்று  தந்ததமைக்கு ..என்னுடனே வாழும்-உண்மை சாட்சி 
(MUSIC)
கண்ணில் நீர்-பனிக்க அன்னை சொன்ன-மொழி இன்றும் ஒலிக்கிறது
மண்ணில்-நல்லவனே என்னின்-மன்னவனே என்றே 
இனிக்கிறது
(2)
அவள் பாசக்குன்றோ அன்பின் வாசக் *கன்றோ (2)
ஒரு ராஜாங்கம் எல்லாம்-தரும் அன்பைத் தருமோ
அந்த ராஜபோகம் அன்னைமடி தன்னைத் தருமோ
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால் வருமா
தாயன்பு பிள்ளை-எக்க..டை..யில்-பெறுவான்
* அது முழுக்காத-பாச வெள்ளம் அல்லவோ
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன்-தந்தால் வருமா


*கன்று = செடி






Sunday, May 1, 2016

11. பெற்ற மனப்-பித்து (அர்த்தமுள்ள இந்துமதம் என்ன சொன்னது)



பெற்ற-மனப் பித்து-ந்தன் அன்னை-கொண்டது
(1+sm+1)
அது ஆண்டவன் தன்-வடிவாய் க்குத்-தந்தது
ஆசை-கொண்ட அன்னை-மனம் அள்ளித்தந்தது (2)
பதிலாய் அன்னைக்கு-நான் செய்த-பணி கொள்ளி வைத்தது
பெற்ற மனப்-பித்து-அந்த அன்னை-கொண்டது
(MUSIC)
கண்ணே-என் பொன்னே-எனப் பிள்ளை-உச்சி மோந்தது 
என்-பிள்ளை போல-உண்டா என்று-மெச்சி மாய்ந்தது
(2)
கண்-கலங்கி என்-வலியைப் போக்கப்-பலதும் செய்தது (2)
தன்-வலியைத் தாங்கிப்-போகும் தானாக-என்றது
(Short Music)
பெற்ற-மனப் பித்து-ந்தன் அன்னை-கொண்டது
(MUSIC)
பெற்றவளே என்-ருசி-தான் உனக்கு-ருசி 
அடாடா என்-வயிற்றில் தோன்றுவதே உனது-பசி
(2)
என்னவெல்லாம் செய்தாய்-நீ எனக்கு-அம்மா 
(1+SM+1)
உனக்குப் பின்னாலே நான்-படிக்கும் கவிகள்-சும்மா 
பெற்ற-மனப் பித்து-ந்தன் அன்னை-கொண்டது
(MUSIC)
எனக்கென்று சொல்லிச்-சொல்லி எதுவும் செய்தததடா 
தனக்கென்று அன்று-கொள்ளி தனை-எனைக் கேட்டதடா
(2)
எந்திரத்தைப் போல-தினம் எந்தன்-பணி செய்ததடா (2)
கைபிடித்த கணவனுக்கும் இல்லையந்த உரிமையடா 
 பிள்ளையென்ற உரிமையடா
பெற்ற-மனப் பித்து-ந்தன் அன்னை-கொண்டது
அது ஆண்டவன் தன்-வடிவாய் க்குத்-தந்தது
பெற்ற-மனப் பித்து-ந்தன் அன்னை-கொண்டது





Saturday, April 30, 2016

10. என் தாய் வடிவில்(ஒரு தாய் வயிற்றில் பிறந்த-உரிமைக்குரல்)




என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்
(2)
எந்த கோவிலிலும்-உள்ள கருவறையில் அன்னை அவள்-பதம்-தான் நின்று அருள்-கொடுக்கும்
என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்
(MUSIC)
காலை எழும்-போதே அன்பைப் பாலாக்கி பான-அமுதூட்டுவாள்
காலைப் பிடித்தந்த இரவில் நான்-தூங்க கானமழை தூவுவாள் 
உண்டு-நீ தூங்குவாய் என்று-நான் கூறினால் 
கண்ணே உந்தன்-பின்னே யாவும்-என்றே கூறுவாள்
என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்
(MUSIC)
உடலின் உயிர்-கூட காலம் வரும்போது உடலைப் பிரிகின்றது 
என்றும் தாயன்பு பிள்ளை என்னுயிரில் இணைந்து தொடர்கின்றது
என்-மகன் மன்னவன் என்று-கொண்..டாடுவாள் 
பிள்ளை நல்ல-பிள்ளை என்று-என்னைப் பாடுவாள்
என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்
(MUSIC)
கண்ணை-மறைக்கின்ற நீரை-மையாக்கி கவியை நான்-பாடலாம் 
தன்னைக் கொடுத்தென்னை அன்னை-வளர்த்திட்ட கதையை அது-கூறலாம் 
(2)
அன்னையின் முழுதினை சொல்லுமா என்-திறம் 
அம்மா உந்தன்-முன்னால் எந்தன் சொல்-எம்..மாத்திரம் (2)
என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்
எந்த கோவிலிலும் உள்ள கருவறையில் அன்னை அவள் பதம் தான் நின்று அருள் கொடுக்கும்
என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்



Tuesday, August 25, 2015

Oh .. Mother…!

                                              


                                                              
Oh..My mom..        Oh..My mom..     Oh..My mom..       Mom..!


Thy-eat-the              nasty-food             though-you-dis...     like
To-meet-the             need-of-the            soul-me-you            like
Pains-you-take         treat-them-like      pleasure-for-my       sake
Reins-you-put          on-plea..sures        just-for-my              sake
In-this-world            of-ma..ny              many-more-love      fakes
Thee-shine-bright     like-the-ice            that’s-on-the           cake
In-the-height            of-the-dar………. kest-of-mid              night
When-the-child        me-get-up             cry-cry-and              cry
In-dirty                     puddle-of-the        excretes-I                lie
When-the-folks      spit-the-words       that-could-deep        fry
Ton-is-the              measure-of-the      love-you                   apply
None-is-the            measure-of-the      love-you                   apply..!

Oh..My mom..       Oh..My mom..      Oh..My mom..       Mom..!

Son-me-think         of-ta..king              steps-in-re.....          ply
Son-me-think         of-showing             love-in-re.....           ply
Oh..My mom..       Oh..My mom..        Off-you-go              fly..!

Nothing-can           come-ne..ar            matching-thy          love
Even-God              looks-small-in        front-of -thee          Mom
_______________________________________________________


Monday, July 6, 2015

6. நீ இன்று எங்கு என்னம்மா(கோவிந்த க்ருஷ்ண விட்டலே-சாய் பஜன்)

(கோவிந்த க்ருஷ்ண விட்டலே-சாய் பஜன்)

நீ-இன்று எங்கு-என்னம்மா இங்கு நில்லாமல் சென்ற..தென்னம்மா

எங்கு எங்கு என்னம்மா நீ சென்றது-எங்கு செல்லம்மா

அம்மா அம்மா சொல்லம்மா நீ எங்கு-எங்கு சொல்லம்மா



5. மழலை-பற்றி குறள்-சொல்லுது (மெழுகு வர்த்தி எரிகின்றது)


சில நேரங்களில்,அன்றாட வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகள் , பழைய கால நிகழ்வுகளை நினைவு படுத்தும். அன்று முழுவதும் சங்கிலித் தொடர் போல் ஒன்றன் பின் ஒன்றாய் அவை தொடரும். இதுகாறும் தோன்றாத பல நிகழ்ச்சிகள் பளிச்சென்று மனக் கண் முன் தோன்றிக் கொடுக்கும் தாக்கத்தினால், ஏக்கத்தைத் தரும். அப்படிப்பட்ட நினைவுகளில் அம்மாவைப் பற்றிய நினைவு முதன்மையானதாகும்..அவ்வாறாக , இன்று என் மனைவி சமைத்த ஒரு அருமையான dish , அம்மாவை நினைவுறுத்தியது…!
பள்ளி நாட்களில் சாயங்கால டிபன் என்னுடைய  வாழ்வில் மறக்க முடியாத ஒன்று…!  மிக எளிதான எதையும் ஏற்காத பிடிவாதக்காரனான எனக்காக தினம் ஒரு ஸ்பெஷல் ஐட்டத்தை சமைக்கும் அம்மாவுக்கு இணை அம்மாவேதான்…! (இப்போது மனைவி.. (ஹி..ஹி..ஹி..) )..!
அந்த நினைவலைத் தேக்கத்தின்  தாக்கமே இப்பாடல்..
ஆயிரத்து முன்னூற்று முப்பது கோடி  பாக்களிலும் அடக்க முடியாது என்பதனாலோ என்னவோ திருவள்ளுவப் பெருமான் அன்னையின் மாண்புக்கு குறள் சொல்ல  வில்லை ..!
எனவே நம் போன்ற பிள்ளைகளின் உணர்வு வெளிப்பாடாக ஒரு குறள் .. ஒரு குரல்..!
“இறைவன்-அடி பரம-சுகம் என்பர்-தன் அன்னை
மடியின்-சுகம் நுகராதவர்..!”
- திரு உள்ளவன்..!
_______________


மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
(1+SM+1)

அன்பு-வாழ்வை நன்கென்றது வெகுவாகப் புகழ்கின்றது (2)
அதை-வேதம் இறை-என்குது 

அம்மாவை என்னென்பது..!
மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
(MUSIC)

அன்பு-என்ற தெய்வம்-மண்ணிலே -
ஆசை-கொண்டு பிறந்து வந்ததே
(2)
அன்னை-என்று பெயரைக்-கொண்டது
பிறகு தன்னின் முழுமை கண்டது
பிறகு தானே முழுமை கொண்டது 
மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
(MUSIC)

தாய்மை-என்னும் கோயில்-தன்னிலே -
தெய்வம்-வந்து குடியிருந்ததே
தாய்மை-என்னும் கோயில்-தன்னிலே -
வாய்மை-வந்து குடியிருந்ததே
இறையத் தேடி வெளியில்-சென்றது
சேய்கள் கொண்ட அறிவின் மாண்பது
பிள்ளை அறிவை என்னவென்பது

மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
அன்பு-வாழ்வை நன்கென்றது வெகுவாகப் புகழ்கின்றது
அதை-வேதம் இறை-என்குது 

அம்மாவை என்னென்பது...!
மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது






Thursday, October 30, 2014

4. இன்னுயிர் தந்தாயே(கோதையின் திருப்பாவை)


இன்னுயிர் தந்தாயே(கோதையின் திருப்பாவை-கிருஷ்ண கானம்)

** Please read this along with the original song **



அம்மா..அம்மா அம்மா.. அம்..மா

இன்னுயிர் தந்தாயே தன்னுயிர் தந்தாயே
என்னுயிர் நீ-இன்று எங்கே அம்மா (2)

வேதனை அறியாயோ சோதனை புரிவாயோ
என்-அழு..குரல்-கேட்டு வருவாய் அம்மா (2)
இன்னுயிர் தந்தாயே தன்னுயிர் தந்தாயே
என்னுயிர் நீ-இன்று எங்கே அம்மா
 (MUSIC)

நீ-எனை ஈன்றெடுக்க பெற்றெனைச் சேர்த்தணைக்க
ஊண்-துறந்தே-துயில் துறந்தாய் அம்மா (2)
நானதை உணராமல் ஐயஹோ உன்-சூலில் (2)
மாபெரும் சுமையாக இருந்தேன் அம்மா
நானொரு சுமையாக இருந்தேன் அம்மா
(MUSIC)

தாரணி..யில்-நாளை உன்மகன் பொன்மேனி
கொண்டிட பல்-கசப்பை மருந்தாய் உண்டாய் (2)
உந்தியில் நில்லாமே மந்தியின் குணத்தாலே (2)
உதைத்துனை வதைத்தேனே ஐயோ அம்மா (2) 
 (MUSIC)

உன்-மகன் மலநீரில் உன்-மடி சேறாக 
சந்தனம் போல் அதனை நினைத்தாய் அம்மா 
பொன் மனத்தால்-என்னை அணைத்தாய் அம்மா
காரிருள் வே..ளையில் பயந்து-நான் கூவிட
நானிருக்..கேன்-கண்ணே பொன்னே என்றாய் (2)
(MUSIC)

நாளைக்குப் பார்த்திடுவேன் நன்றியைச் செலுத்திடுவேன்
என்று-நாள் கடத்தி-வந்தேன் நானும் அம்மா
சோம்பி-இ..ருந்த-பாவி நான்-தான் அம்மா
யாரிடம் கூறுவேன் என்ன-எண்ணித் தேறுவேன் (2)
வந்திடுமா மீண்டும் அந்தப் பொன்னாள்
கண்படுமா ஐயோ அன்னை உன்-தாள்

இன்னுயிர் தந்தாயே தன்னுயிர் தந்தாயே
என்னுயிர் நீ-இன்று எங்கே அம்மா (2)
வேதனை அறியாயோ சோதனை புரிவாயோ
என்-அழு..குரல்-கேட்டு வருவாய் அம்மா (2)




3. அம்மம்மா நீ எங்கே சென்றாயம்மா(கல்லெல்லாம் மாணிக்க)

** Please read this along with the original song **


அய்யஹோ ..ஓ.ஹோ
அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா
1+(SM)+1
சொல்லெல்லாம் கண்ணே எனும் சொல்லாகுமா
உலகெல்லாம் தாய்-உந்தன் ஈடாகுமா
(2)

அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா
(MUSIC)

நெஞ்சுருக வைக்கும்-அந்த திருவாசகம்
தாயின்அன்பு மட்டுமேதான் அதிலே-சிவம்
(2)
வந்தென்னை பார்த்திருப்பாய் கண்ணல்லவா நானுன் கண்ணல்லவா
(1+SM+1)
உன்மழலை தூங்குவதுன் மடியல்லவா அன்பின் மடியல்லவா
ஐயோ ..ஓ ..

அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா

அய்யஹோ ..ஓ.ஹோ..
(SM)
துன்பம்-பல உனக்கு-தந்தேன் நானல்லவா
வாழி-வாழி என்றணைத்தாய் நீயல்லவா
(2)
மண்ணிலேஇனி எனக்கு யார்தான்கதி அம்மா யார்தான்கதி(2)
என்று-எண்ணி வாடுகின்றேன் ஏன்இவ்விதி ஐயோ ஏன் இவ்விதி
அய்யஹோ ..ஓ ..

அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா

2. எங்கே என் தாய் (கண்ணன் வந்தான்)

** Please read this along with the original song **



விருத்தம்
என்பினால் செய்ததில்லை அன்புடலே  தாய்க்கு
கல்லெனக்கும் கசிந்துருகும் அவள்மனமே பாகு
நான்பசித்துப் பொறுப்பாளா தான்ருசித்து உண்பாளா
என்தாயின் அன்புமுகம் எங்கே எங்கே
___________

(MUSIC)
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
(2)
எங்கே என்தாய்..!
(MUSIC)

தேடி எங்கும் காணவில்லை எங்கே என்தாய்
வாடி நானும் துடிக்கின்றேன் எங்கே என்தாய்
(2)
கேட்டிடாமல் தருபவளே அன்பே என் தாய்
கேள்விகளே கேட்காமல் தருவாள் என் தாய்
தர்மம் கொண்ட உருவகமே என்தாய் என்தாய்
தாளாத துயர் தந்து சென்றாள் என்தாய்

எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய் எங்கே என்தாய்
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
எங்கே என்தாய்..!

(MUSIC)

ஆறுதலை அளித்தணைக்கும் அவள்பூம் பதம்
என்கவலை மறக்க வைக்கும் என்தாய் முகம்
(2)
முரடன் எனை மகிழ்ந்தணைக்கும் என்தாய் பதம்
மூடன் எனைப் புகழ்ந்தினிக்கும் என்தாய் முகம்
(2)
பகவானின் கருவறைஎன் தாயின் பாதம்
அஞ்சாதே எனகாக்கும் அன்னை பாதம்
அன்னை பாதம் எந்தன் அன்னை பாதம் அன்னை பாதம்
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
எங்கே என்தாய்...!
அம்மா…
அம்மா… அம்மா …!
(MUSIC)

 சிறுமை கொண்டு நான் மறந்து போனபோதும்
அருமை என்று உனைநினைந்தி..டாதபோதும்
 (2)

எனை மழலை என்றுநீவா..தாடுவாயே 
தலையில்வைத்து  நீயும்கொண்..டாடுவாயே
 (2)

உலகினிலே உனைப் பிரிந்து நின்றேன் அம்மா
உன்னைநான் யாரிடத்தில் காண்பேன் அம்மா
 (2)

 அம்மா அம்மா அம்மா அம்மா

எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
எங்கே என்தாய் .. எங்கே என்தாய்...
!


.




Sunday, August 7, 2011

1. அம்மா..!




 தாய்க்குச் செய்யும் தர்ப்பண ஸ்லோகத்தின் பொருளமைய 
 கண்ணீர்ப் பூக்களால் தொடுக்கப்பட்ட சொல் மாலை ...
மகனின் அர்ப்பணம்  தாய்க்கு ...!

 தன்னிலெனைச் சேர்த்துநின்ற நாள்முதலாய்ப் பார்த்த   
கண்ணிலுறை விழிகாக்கும் நல்லிமையாய்க் காத்த  
தண்ணிலுறை மலர்ப்பாதம் தொட்டுனைநான் வாழ்த்த 
மண்ணிலுறை செய்யாமல் சென்றாய் எவரைப்பார்க்க ?


என்னைக் கருவேற்கத் தன்னைக் கருதாமல் 
பின்னை வரும்மெய் வேதனையால் பழுதானாய் 
உண்ணும் உணவேற்காவுன் உடம்புபடும் வேதனைமுன் 
விண்ணேகும் தருணம்தரும் சோதனையும் பெரிதாமோ..! 


கருவான என்னுடம்பு வளருமுன்னே தாரணியில்
பிறவாத அழகுடன்நான் பிறக்கஎண்ணி உறக்கத்திலும் 
மறவாத நல்லுணவை என்பொருட்டு துறந்தனையே
நாதிறவா பல்லுணவை என்னைஎண்ணி ஏற்றனையே...!

சுமையாக உனைத்தாக்கி வயிற்றில் நின்றும் 
இமையாக எனைக்காக்க எண்ணம் கொண்டு   
 அமையாமல் ஓர்கணமும் அங்கு மிங்கும்
நிலையாமல் அலைந்தாயே மூச்சு முட்ட..! 

உள்ளிருக்கும் என்நினைப்பைக் கருத்திருத்திக் கூட்டின் 
உள்ளிருக்கும் ஆசைகளை அழுத்திக்கட்டி காட்டின் 
கள்ளிருக்கும் மலர்வண்டின் மனத்தடக்கி வீட்டின் 
உள்ளிருந்து நோன்பிருந்த தெய்வத் தாயே..!

தலைபுரண்டு  குடல்கிழிந்து உந்தன் கோலம் 
நிலைகுலைந்து எழில்அழிந்து  நிற்கும் காலம்
வலியில்லை இதுவுமினி கண்ணனின் ஜாலம்      
சலிப்பின்றி கண்டிடுவேன் என்றதுன் ஞானம் ..!

கருவின்று வெளிப்பொந்த என்உதிரம் பார்த்து 
வெறுப்பின்றி களிப்பெய்தி உன்அதரம் சேர்த்து 
உருவன்று கிளிப்பிள்ளை என்னுயிரெனக்கோர்த்து
கற்பகத் தருவென்று சளிப்பிள்ளை என்முகம்சேர்த்தாயே..!

கடித்த பல்லால் வலித்த மார்பால் 
குடித்த பாலால் வளர்ந்த என்பால் 
எழுந்த அன்பால் தளர்ந்த உன் பால் 
விழுந்த மாசு விலக்கி உண்டாயே..!

முற்றத்தில் நிலவிருக்கும் நள்ளிரவு வேளையிலே
பற்றியதீ கொண்டதுபோல் நான்எழுந்து அழுகையிலே 
மற்றவரின் ஏச்சும்பேச்சும் உன்னைவந்து தைக்கையிலே
பெற்றவள்நான் உள்ளவரை ஏன்அழுகை என்றவளே...!

மலர்மஞ்சம் நாணுறுமுன் மடிசாய்ந்த வேளையிலென்
மலஜலத்தால்  மாசுபட்டும் முகம்கோணா நிலமகளே 
விலையுனக்கு என்னதர என்றுநிற்கும் வேளையிலே  
வலைபிரிந்த பறவைபோல் பறந்தாயே  விண்ணின்மேலே ..!

நானுண்ட பாலின்சுவை மாறுமுன்னே உய்யத் 
 தானுண்ட விடம்கொண்ட நீலகண்டன் தெய்வத்
தேனுண்ட விண்ணோருடன் சேர்ந்திருக்க ன்னை
கானுண்ட வண்ணம்கொண்டு அமர்ந்திருக்கும்  ஆண்டவனை

நான்கொண்ட சினம்தாக்கா எண்ணம்கொண்டுன் 
நற்குணத்தால் நான்வழங்கும் மன்னிப்பீண்டு 
பெற்ற தாயில்லாப்பிள்ளையவன்   என்றேயன்றி
மற்ற வரமருளும்ஈசனென்ற  நினைப்பாலன்று..!